NATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிளந்தான், திராங்கானுவுக்கு மத்திய அரசு வெ.10 கோடி நிதியுதவி

பாசீர் மாஸ், டிச 22- கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்கு உடனடி உதவி
நிதியாகப் பத்து கோடி வெள்ளியை வழங்க மத்திய அரசாங்கம் நேற்று
அங்கீகாரம் வழங்கியது.

கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண
உதவிகளை வழங்குவதற்காக அவ்விரு மாநிலங்களுக்கும் தலா 5 கோடி
வெள்ளி வழங்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் எதிநோக்கும் சிரமத்தைக்
குறைக்கும் வகையில் கிளந்தான் மற்றும் திரங்கானுவுக்குத் தொடக்க
நிதியாக தலா 5 கோடி வெள்ளியை வழங்க அரசாங்கம் ஒப்புதல்
அளித்துள்ளது என அவர் சொன்னார்.

இதன் மூலம் அவ்விரு மாநிலங்களுக்கும் மொத்தம் பத்து கோடி வெள்ளி
வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது என்று இங்குள்ள தெங்கு
பங்ளிமா ராஜா தேசிய இடைநிலைப்பள்ளியில் உள்ள தற்காலிக நிவாரண
மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
தெரிவித்தார்.

அந்த வெள்ள நிவாரண மையத்தில் சுமார் 30 நிமிடங்களைச்
செலவிட்ட அவர், அங்கு தங்கியுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல்
கூறினார். அதனைத் தொடர்ந்து கிளந்தான் மாநிலத்தில் வெள்ள நிலவரம்
தொடர்பில் பல்வேறு அரசு துறைகளின் பிரதிநிதிகள் வழங்கிய
விளக்கமளிப்பிலும் கலந்து கொண்டார்.


Pengarang :