ECONOMYNATIONAL

வெள்ளத் தடுப்புத் திட்டம்- மறு பேச்சுவார்த்தை வழி 180 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும்- அன்வார்

புத்ராஜெயா, டிச 23- வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட
டெண்டர் நடைமுறையின் வழி அரசாங்கம் 180 கோடி வெள்ளியை
மிச்சப்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறியுள்ளார்.

டெண்டர் (அளிப்பாணை) முறையில் அல்லாமல் நேரடிப்
பேச்சுவார்த்தையின் மூலம் 1,500 கோடி வெள்ளி மதிப்பில் வெள்ளத்
தடுப்புத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியதால் அதன் செலவினம்
அபரிமித அதிகரிப்பைக் கண்டதாக அவர் சொன்னார்.

ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட டெண்டர் முறையின் வாயிலாக
சம்பந்தப்பட்ட்ட நிறுவனத்துடன் மறு பேச்சுவார்த்தை நடத்தும்படி
நிதியமைச்சு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 1,500 கோடி வெள்ளி மதிப்பிலான திட்டத்திலிருந்து 180 கோடி
வெள்ளியை மிச்சப்படுத்த முடியும். இது சிறந்த முன்னுதாரணமாக
விளங்குகிறது. தலைமைத்துவம் வீண் விரயத்தை தடுக்க வேண்டும். இது
அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. மாறாக, மக்கள் நலன் சம்பந்தப்பட்டது
என்று அவர் தெரிவித்தார்.

ஒரு திட்டத்தின் மூலம் மிச்சப்படுத்திய 180 கோடி வெள்ளியைச் சிறு
வியாபாரிகளுக்குத் திருப்பிக் கொடுத்தால் எப்படி இருக்கும். சற்று கற்பனை
செய்து பாருங்கள் என்று 2022ஆம் ஆண்டிற்கான தேசிய நிலையிலான
அங்காடி மற்றும் சிறு வியாபாரிகள் மாநாட்டை தொடக்கி வைத்து
உரையாற்றுகையில் அவர் கூறினார்.


Pengarang :