ECONOMYSELANGOR

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் உதவித் திட்ட விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு

கிள்ளான், டிச 23- எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பின் ஏற்பாட்டிலான மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டப் பயனாளிகளின் பட்டியலைச் சட்டமன்றத் தொகுதிகள் தங்களிடம் சர்ப்பிப்பதற்கு ஏதுவாக இந்தக் கால அவகாச நீட்டிப்பு வழங்கப்படுவதாக எம்.பி.ஐ. நிறுவன சமூகக் கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இந்த திட்டத்திற்கான விண்ணப்பக் காலம் கடந்த வாரமே முடிவுக்கு வந்து விட்டது. அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து விட்ட போலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட 300 இடங்களை அவை பூர்த்தி செய்யவில்லை என அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியிலும் தலா 300 பயனாளிகளுக்கு வாய்ப்பு வழங்குகிறோம். சில தொகுதிகள் 40 பேரின் பெயர்களை மட்டுமே அனுப்பியுள்ளன. 300 பேருக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தாதது சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு இழப்பாக அமையும் என்றார் அவர்.

செந்தோசா தொகுதியிலுள்ள வசதி குறைந்த பி40 பிரிவைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் நிகழ்வுக்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜூம் கலந்து கொண்டார்.

சில தொகுதிகள் 300 பேரின் விண்ணப்பங்களை முழுமையாக அனுப்பிய போதிலும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாதக் காரணத்தால் அவற்றில் சில விண்ணப்பங்களை எம்.பி.ஐ. நிராகரித்து விட்டதாகக் கூறிய அஸ்ரி, அதற்கு மாற்றாக வேறு பெயர்களைச் சமர்ப்பிக்கச் சம்பந்தப்பட்டத் தொகுதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இந்த மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியையும் சேர்ந்த வசதி குறைந்த 300 மாணவர்களுக்குத் தலா 100 வெள்ளி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித் திட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட 2,500 வெள்ளி குடும்ப வருமான வரம்பு அடுத்தாண்டு முதல் 4,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.


Pengarang :