NATIONAL

பத்தாங் காலி – கெந்திங் மலை சாலை ஒரு வாரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு மீண்டும் திறக்கப்படும்

தனா மேரா, டிச. 23 – உலு சிலாங்கூரில் உள்ள பத்தாங் காலி – கெந்திங் மலை சாலை ஒரு வாரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

சமீபத்தில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட அப்பாதையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அப்பகுதியை அமைச்சு இன்னும் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

“ஒரு வார காலத்திற்குள் மோட்டார் சைக்கிள் பயனர்களுக்குப் பாதை மீண்டும் திறக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மண்ணில் நகர்வுகள் இன்னும் ஏற்படுவதால், அப்பகுதியை முழுமையாகக் கண்காணிக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்,“.

“நாங்கள் பொருத்தியக் கருவிகள் இன்னும் இரண்டு முதல் நான்கு மில்லிமீட்டர் வரையிலான மண்ணில் நகர்வுகளை பதிவு செய்கின்றன. அவை கண்காணிக்க நேரம் எடுக்கும்” என்று நந்தா கூறினார்.

சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிலச்சரிவு சம்பவம் நடந்த பகுதியில் தேவையான பணிகளை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) நிபுணர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்றார்.

“பத்தாங் காலி நிலச்சரிவு பகுதியில் உள்ள சாலையை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும் என்று பல தரப்பினரின் அழைப்புகள் இருந்தபோதிலும் நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை,” என்று அவர் கூறினார், மேலும் இந்த பாதை மற்ற வாகனங்களுக்கும் கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும்,“ என்றார்.

– பெர்னாமா


Pengarang :