SELANGOR

சிலாங்கூர் அரசின் வேலை வாய்ப்பு கண்காட்சி வழி 1,063 பேருக்கு வேலை வாய்ப்பு

ஷா ஆலம், டிச 26- இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான மெகா வேலைவாய்ப்பு கண்காட்சியின் இரண்டாம் கட்டத் தொடரின் மூலம் 1063 பேருக்குக் கிடைத்தது.

செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாய கண்காட்சி பூங்காவில் (மேப்ஸ்) நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்றவர்களில் 747 பேருக்கு அங்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் உடனடியாக வேலை கிடைத்ததாக மனிதவள மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இதுதவிர, மேலும் 4,243 பேர் சம்பந்தப்பட்ட முதலாளிகளால் இதுவரை இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு இன்னும் நடைபெற்று வரும் வேளையில் இதில் அனைவரும் தேர்வு பெற்று வேலை வாய்ப்பினைப் பெறுவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

சிலாங்கூரில் வேலையில்லா விகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி நடத்தப்படுவதாகக் கூறிய அவர், இதன் மூலம் மாநிலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கையை நான்கு விழுக்காட்டிற்கும் கீழ் நிலைநிறுத்த முடியும் எனத் தாங்கள் நம்புவதாக குறிப்பிட்டார்.

இம்மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் செர்டாங், மேப்ஸ் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற இந்த இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் சுமார் 300 பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் பங்கு கொண்டு 30,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கின.

பெருசஹான்  ஆட்டோமோபில் நேஷனல் (புரோட்டோன்), போஸ் மலேசியா, பெராசாரானா, புஞ்சா நியாகா பெர்ஹாட், ஸ்டார்பக்ஸ், கெந்திங் மலேசியா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும்  மத்திய மற்றும் மாநில அரசின் துணை நிறுவனங்களும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு கொண்டன.


Pengarang :