NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிலிருந்து தினமும் ஒன்று முதல் இரண்டு டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன

ஷா ஆலம், டிச 26: பத்தாங் காலி நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி (SAR) சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மற்றும் உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (MPHS) ஆகியவை தினமும் ஒன்று முதல் இரண்டு டன் குப்பைகளை அவ்விடத்தில் சேகரித்தன.

துப்புரவு அதிகாரி கைருல் ஹபிசி (42), அவர்கள் மற்ற ஏழு அதிகாரிகளுடன் சேர்ந்து அவ்விடத்தில் மதியம் மற்றும் இரவு இரண்டு அல்லது மூன்று முறைகள் குப்பை சேகரிப்பு பணியை மேற்கொண்டதாகச் சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

“ஒரு நாளைக்கு ஒரு டன், சில நேரங்களில் இரண்டு டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன..

“இதில் சவாலானது கடுமையான வெப்ப வானிலை மற்றும் மழை பெய்தால் எங்களால் பணியைத் தொடர்ந்து செய்ய முடியாது. அதோடு, குறுகலான சாலையில் செல்ல எங்களுக்கு சிரமமாக இருந்தது,” என்று சனிக்கிழமை சம்பவம் நடந்த இடத்தில் சந்தித்தபோது கைருல் ஹபிசி கூறினார்.

சம்பவம் நடந்த முதல் நாளில் துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட மூன்று டன் திடக்கழிவுகள் அவ்விடத்தில் சேகரிக்கப்பட்ட அதிகபட்சக் கழிவுகளாகும்.

அனைவரும் காலை மற்றும் இரவு என இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்தனர். மேலும் டிசம்பர் 16 முதல் சம்பவ இருப்பிடத்திலேயே இருந்தனர்.

மொத்தம் 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 61 பேர் உயிர் பிழைத்துள்ளனர், அதே நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு வயது குழந்தை உட்பட 18 பெரியவர்கள் மற்றும் 13 குழந்தைகள் அடங்குவர்.

ராயல் மலேசியன் போலீஸ், மலேசிய ஆயுதப்படை, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய சிறப்பு தேடல் மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்) மற்றும் மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (APM) ஆகிய ஐந்து முக்கிய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஒன்பது நாள் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


Pengarang :