SELANGOR

பொறித்தக் கோழியை எலி ருசித்த சம்பவம்- உணவகத்தின் உரிமம் ரத்து- எம்.பி.ஏ.ஜே. அதிரடி

ஷா ஆலம், டிச 26- பொறித்தக் கோழியை எலி ருசி பார்ப்பதை சித்தரிக்கும்
காணொளியில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் லைசென்சை உடனடியாக
ரத்து செய்யும் அறிக்கையை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம்
வெளியிட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா வாயிலாக சுகாதார அமைச்சு
பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக
அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தலைவர் முகமது பவுசி முகமது
யாத்திம் கூறினார்.

அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடுவதற்கான உத்தரவை மாநில
சுகாதாரத் துறை கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்ததாக அவர்
சொன்னார்.

அந்த உடனடி லைசென்ஸ் ரத்து அறிக்கையை மீறி செயல்படும்
பட்சத்தில் அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்படும். கடந்த 2021 ஜூன்
மாதம் அந்த உணவகத்திற்கு தூய்மைக்கான தரச் சோதனையில் பி கிரேட்
வழங்கப்பட்டிருந்தது. ஆகக்கடைசியாக கடந்த ஜனவரி மாதம் அங்கு தரச்
சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

இவ்விவகாரத்தை நகராண்மைக் கழகம் கடுமையாகக் கருதுவதாகக்
கூறிய முகமது பவுசி, தூய்மை சம்பந்தப்பட்ட விஷயத்தில் மெத்தனப்
போக்கை கடைபிடிக்கும் உணவகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என எச்சரித்தார்.

நகராண்மைக் கழகத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை
முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவற்றின்
தூய்மை மீது தாங்கள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாகவும்
அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 1,057
உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு குற்றங்களுக்காக
259 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றும் அவர்
தெரிவித்தார்.


Pengarang :