NATIONAL

பத்தாங் காலி நிலச்சரிவு- இறுதிக் கட்ட விசாரணை, 77 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பாங்கி, டிச 27- பத்தாங் காலி, ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம்
பொழுதுபோக்கு முகாம் பகுதியில் கடந்த 16ஆம் தேதி நிலச்சரிவு
தொடர்பான காவல் துறையின் விசாரணை 90 விழுக்காட்டை
எட்டியுள்ளது.

சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்வது, மீட்புப் பணியில்
ஈடுபட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வது, இச்சம்பவத்தில்
பலியானவர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காகத்
தடயவில் நிபுணர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வது ஆகிய பணிகள்
மட்டுமே எஞ்சியுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ
அர்ஜூனைடி முகமது கூறினார்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,
முகாம் நடத்துநர், அதன் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களிடம்
இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின 304(ஏ) பிரிவு,
குற்றவியல் சட்டத்தின் 290வது பிரிவு மற்றும் 1974ஆம் ஆண்டு ஊராட்சி
மன்றச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என அவர் சொன்னார்.

மலேசியத் தேசியப் பல்கலைக்கழக தன்னார்வலர் போலீஸ்
இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சி மற்றும் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கும்
நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

பயிற்சியை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட அப்பல்கலைக்கழகத்தில்
பயிலும் 66 மாணவர்கள் இந்த நிகழ்வில் சான்றிதழ் பெற்றனர்.

இதனிடையே, அந்த நிலச்சரிவு சம்பவத்தில் மொத்தம் 20 வாகனங்கள்
பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக கூறிய அர்ஜூனைடி, அதன் உரிமையாளர்களை அடையாளம் காணும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார்.


Pengarang :