NATIONALSELANGOR

வெள்ளம்- செர்வ், பந்தாஸ் குழுக்கள் அடுத்த மாதம் கிழக்கு கரை மாநிலங்களுக்குச் செல்லும்

கோத்தா பாரு, டிச 27- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளந்தான் மற்றும்
திரங்கானு ஆகிய மாநிலங்களில் வெள்ளத்திற்குப் பிந்தைய உதவிகளை
வழங்க சிலாங்கூர் அரசின் தன்னார்வலர் குழு (செர்வ்) மற்றும் பந்தாஸ்
எனப்படும் விரைவு நடவடிக்கை குழு அடுத்த மாதம் அம்மாநிலங்களுக்கு
அனுப்பப்படும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை சீராக மேற்கொள்வதற்கு
ஏதுவாக இந்த செர்வ் மற்றும் பந்தாஸ் குழுக்களை அங்கு அனுப்பும்
பணியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் இரு மாநில அரசுகளும்
தற்போது ஈடுபட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

நேற்று, சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு அவ்விரு மாநில
அரசு அதிகாரிளுடனும் சந்திப்பு நடத்தியது. வெள்ளம் 80 முதல் 90
விழுக்காடு வரை வடிந்தப் பின்னர் துப்புரவு பணிகளைத்
தொடங்குவதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறோம் என
அவர் குறிப்பிட்டார்.

வரும் ஜனவரி மாதத்தில் அவ்விரு மாநில குழுக்கள் மற்றும் அரசு சாரா
அமைப்புகளுடன் இணைந்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள
விரும்புகிறோம். இதன் மூலம் இதன் மூலம் பணிகளைச் சீராகவும்
முரண்பாடின்றியும் மேற்கொள்ள இயலும் என்றார் அவர்.

இன்று இங்கு சிலாங்கூர் மாநில அரசின் வெள்ள நிவாரண நிதியைக்
கிளந்தான் மந்திரி புசார் டத்தோ அகமது யாக்கோப்பிடம் ஒப்படைத்தப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :