SUKANKINI

ஏ.எப்.எப். கிண்ணப் போட்டி- வியட்னாமிடம் 0-3 கோல் கணக்கில் மலேசியா தோல்வி

ஹனோய், டிச 28- இங்குள்ள மை டின் தேசிய அரங்கில் நேற்றிரவு
நடைபெற்ற ஏ.எப்.எப். கிண்ண கால்பந்துப் போட்டியின் பி பிரிவு
ஆட்டத்தில் மலேசியா குழு 0-3 என்ற கோல் கணக்கில் வியட்னாமிடம்
தோல்வி கண்டது.

இந்த பரபரப்பும் சர்ச்சைகளும் நிறைந்த இந்த ஆட்டத்தின் போது இரு
அணிகளைச் சேர்ந்த இரு ஆட்டக்காரர்களை ஜப்பானிய நடுவரான ரியுஜி
சாத்தோ சிவப்பு கார்டுகளை வழங்கி திடலிலிருந்து வெளியேற்றினார்.

முற்பாதி ஆட்டத்தின் போது வியட்னாமிய தாக்குதல் ஆட்டக்காரர்
இங்குயேன் வான் தோன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட
வேளையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான தவற்றைச் சுட்டிக்
காட்டி மலேசிய தற்காப்பு ஆட்டக்காரர் முகமது அஸாம் அஸ்மியை
நடுவர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் வெளியேற்றினார்.

காற்று மற்றும் குளிர் நிறைந்த சீதோஷண நிலையில் திடலில்
களமிறங்கிய மலேசிய குழு வியட்னாம் அணியின் இடைவிடாத
தாக்குதல்களால் நிலைத் தடுமாறிப் போனது. மலேசிய அணியும்
சுதாரித்துக் கொண்டு வியட்னாம் கோல் முனையை நோக்கி
எதிர்த்தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

ஆட்டத்தின் 29 வது நிமிடத்தில் வியட்னாம் குழுவின் கேப்டன் டோ
ஹுங் டுங் வழங்கிய பந்தை தாக்குதல் ஆட்டக்காரர் இங்யென் தியேன்
லின் தலையாட்டி முட்டி கோலாக்கினார்.

ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் வியட்னாம் ஆட்டக் காரர் கியூ இங் ஹாய்
மற்றொரு கோலை புகுத்தி கோல் எண்ணிக்கையை இரண்டாக
உயர்த்தினார்.

ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மூன்றாவது கோலை புகுத்தியதன் வழி
இவ்வாட்டத்தில் வெற்றி பெற்று கடந்த 2014 முதல் மலேசியாவிடம்
தோல்வி காணாதக் குழு என்ற பெருமையை வியட்னாம் பெற்றது.


Pengarang :