SUKANKINI

ஏ.எப்.எப். கிண்ண கால்பந்து- மலேசியா 4-1 கோல் கணக்கில் சிங்கப்பூரை வென்றது

கோலாலம்பூர், ஜன 4- ஆசியான் கால்பந்து சம்மேளனக் கிண்ண (ஏ.எப்.எப்.)
கால்பந்து போட்டியின் பிரிவு ஆட்டத்தில் மலேசியா தனது பரம
வைரியான சிங்கப்பூரை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி
சுற்றுக்குத் தகுதி பெற்றது.

நேற்றிரவு இங்குள்ள புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற அந்த
ஆட்டத்தில் மலேசிய அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக 65,147 ரசிகர்கள்
திரண்டனர்.

இந்த ஆட்டத்தின் பி பிரிவில் இரண்டாம் இடத்தை பெறுவதற்குச் சிங்கப்பூர்
அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் ஹரிமாவ் மலாயா
அணி வெற்றிகராக முறியடித்தது. இந்த வெற்றியின் வழி 9 புள்ளிகளுடன்
வியட்னாமுக்கு அடுத்த நிலையில் மலேசியா உள்ளது.

கடந்த முறை நடைபெற்ற போட்டியின் போது மோசமான ஆட்டத்தை
வெளிப்படுத்திய அணி என்ற அவப்பெயரை இந்த வெற்றியின் வழி
மலேசிய அணி நீக்கிக் கொண்டதோடு கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு
தி லையன்ஸ் எனும் சிங்கை அணியை தோற்கடித்த பெருமையையும்
பெற்றுள்ளது.

மலேசியாவின் முதல் கோலை டேரன் லோக் ஆட்டத்தின் முதல்
பாதியில் போட்ட வேளையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின் போது
ஸ்டுவர்ட் வில்கின், மத்திய திடல் ஆட்டக்காரர் செர்ஜியோ ஆகுரியோ
மூலம் மேலும் மூன்று கோல்களை புகுத்தியது.

சிங்கப்பூர் அணி தனது ஒரே கோலை ஃபாரிஸ் ரம்லி மூலம் ஆட்டத்தின்
85வது நிமிடத்தில் போட்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய குழு ஏ
பிரிவு வெற்றியாளரான தாய்லாந்துடன் மோதுகிறது. வியட்னாம் குழு ஏ
பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்தோனேசியாவை சந்திக்கிறது.


Pengarang :