NATIONAL

கடந்தாண்டில் டிங்கி சம்பவங்கள் 150 விழுக்காடு அதிகரிப்பு- 56 பேர் மரணம்

கோலாலம்பூர், ஜன 5- நாட்டில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின்
எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் 150.7 விழுக்காடு அதிகரித்து
39,737 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இந்த
எண்ணிக்கை 26,365ஆக மட்டுமே இருந்தது.

கடந்தாண்டில் டிங்கி சம்பவங்கள் காரணமாகப் பதிவான உயிரிழப்புகளின்
எண்ணிக்கை 56 ஆகும் எனச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ
டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

2021ஆம் ஆண்டில் இந்நோயினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை
20ஆக மட்டுமே இருந்தது. இது கூடுதலாக 36 மரணச் சம்பவங்களை
அதாவது 180 விழுக்காட்டு அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

டிங்கி சம்பவங்களின் அதிகரிப்பு குறித்து அனைத்துத் தரப்பினரும் கூடுதல்
கவனம் செலுத்த வேண்டிய தருணம் எற்பட்டுள்ளது. டிங்கி
சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது நாம் அனைவரின் கடமையாகும் என
அவர் சொன்னார்.

டிங்கி காய்ச்சல் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தடுப்பு
நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்வது அவசியம். ஏடிஸ்
கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்காமல் மருந்து தெளிப்பதால் மட்டும்
எந்த பலனும் ஏற்பட்டு விடாது என அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் அனைத்து துறைகளும்
திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் பரவலான காரணத்தால்
நோய்த் தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது என அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :