ECONOMYNATIONAL

சுற்றுப்பயணிகளின் தேர்வுக்குரிய இடமாகச் சிலாங்கூர் இவ்வாண்டிலும் விளங்கும்- ஆட்சிக்குழு உறுப்பினர் நம்பிக்கை

காஜாங், ஜன 5- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக
நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ள போதிலும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இடமாகச்
சிலாங்கூர் இவ்வாண்டிலும் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நேற்று அறிவித்த சீரான செயலாக்க நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.)
நாட்டிற்கு குறிப்பாகச் சிலாங்கூருக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள்
வருவதற்குத் தடையாக இருக்காது என தாம் நம்புவதாகச் சுற்றுலாத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

சீனா உள்பட வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்குக்
கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் அமல்படுத்தப்படும் எனப் பிரதமர்
நேற்று கூறினார். சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதை இந்த புதிய
விதிமுறை பாதிக்காது என நான் கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

அந்த எஸ்.ஒ.பி. விதிமுறை தடுப்பூசியை இலக்காகக் கொண்டதாக
இருக்கலாம். தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்கள்
அல்லது கோவிட்-19 சோதனைக்குட்படுத்திக் கொண்டவர்கள் நாட்டிற்குள்
நுழையலாம். இது வழக்கமான நடைமுறைதான் என்றார் அவர்.

பண்டார் மக்கோத்தா செராஸ் பகுதியிலுள்ள குவாரி பகுதியை இன்று
காலை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டப் பின்னர்
சிலாங்கூர் மாநிலத்திற்கு 1 கோடியே 20 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை
புரிந்துள்ளனர்.


Pengarang :