HEALTHNATIONALSELANGOR

சிலாங்கூரிடம் போதுமான அளவு ஊக்கத் தடுப்பூசி கையிருப்பு உள்ளது

ஷா ஆலம், ஜன 6- சிலாங்கூர் அரசிடம் போதுமான அளவு கோவிட்-19
ஊக்கத் தடுப்புசி உள்ளதாகப் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வதற்கு ஏதுவாக
பூஸ்டர் எனப்படும் அந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும்படி மாநில
மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது நம்மிடம் போதுமான அளவு தடுப்பூசி குறிப்பாக சினோவேக்
வகை தடுப்பூசிகள் உள்ளன. தேர்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் இந்த
தடுப்பூசியை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் சொன்னார்.
மற்ற வகை தடுப்பூசிகளைப் பொறுத்த வரை சுகாதார அமைச்சின்
பதிலுக்காகத் தாங்கள் காத்திருப்பதாக அவர் சிலாங்கூர் கினியிடம்
தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக ஊக்கத்
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும்படி பொதுமக்களை பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் அண்மையில் கேட்டுக் கொண்டார்.

முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைக் காட்டிலும் ஊக்கத்
தடுப்பூசிக்குப் பொது மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து காணப்படுவதாக
கூறிய அவர், இதுவரை 4.9 விழுக்காட்டினர் மட்டுமே ஊக்கத்
தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார்.

ஒமிக்ரோன் பிஏ.5.2 மற்றும் பிஎப்.7 ஆகிய இரு வகை கோவிட்-19 திரிபுகள்
நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு கடந்த
31ஆம் தேதி கூறியிருந்தது.


Pengarang :