NATIONAL

நான்கு ஆண்டுகளில் 39,323 வீடு வாங்குவோர் உரிமைக் கோரல் தீர்ப்பாயப் புகார்களுக்குத் தீர்வு

புத்ராஜெயா, ஜன 6- கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில்
வீடு வாங்குவோர் உரிமைக் கோரல் தீர்ப்பாயம் மற்றும் அடுக்குமாடி
குடியிருப்பு மேலாண்மை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட 39,323 புகார்களுக்கு
வீடு மற்றும் அடுக்குமாடி வீடு மேலாண்மைத் தீர்ப்பாயம் தீர்வு
கண்டுள்ளது.

இக்காலக் கட்டத்தில் வீடு வாங்குவோர் உரிமை கோரல் தீர்ப்பாயம்
சம்பந்தப்பட்ட 7,202 புகார்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மை
தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட 32,121 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது
என்று ஊராட்சி மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
அதற்கு முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் இருந்த புகார்களும் இதில்
அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் நீடித்த போதிலும் கடந்த 2018 முதல்
பதிவு செய்யப்பட்ட அவ்விரு தீர்ப்பாயங்கள் சம்பந்தப்பட்ட 95
விழுக்காட்டிற்கும் மேற்பட்ட புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என
அவர் சொன்னார்.

வீடு மற்றும் அடுக்குமாடி வாங்குவோர் மேலாண்மைத் தீரப்பாயம் இரு
பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீடு வாங்குவோர் உரிமைக் கோரல் தீர்ப்பாயம்
மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு மேலாண்மைத் தீர்ப்பாயம் என
வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வீடு கொள்முதல் விவகாரத்தில் வீடு வாங்கியோருக்கும்
மேம்பாட்டாளருக்கும் இடையே ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அடுக்குமாடி
குடியிருப்பு மேலாண்மை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எளிதாகவும்
மலிவாகவும் விரைவாகவும் தீர்க்க இந்த தீர்ப்பாயம் பெரிதும் உதவுகிறது.


Pengarang :