SELANGOR

பண்டார் மக்கோத்தாவில் நெரிசல்- குவாரி லோரிகள் மாற்று வழியைப் பயன்படுத்த உத்தரவு

காஜாங், ஜன 6- பண்டார் மக்கோத்தா செராசில் உள்ள பெர்சியாரான்
மக்கோத்தா செராஸ் 1 சாலையைப் பயன்படுத்த குவாரி லோரிகளுக்குத்
தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக காஜாங் சட்டமன்ற
உறுப்பினரும் சுற்றுச் சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான
ஹீ லோய் சியான் கூறினார்.

அச்சாலையில் நிகழும் போக்குவரத்து நெரிசல், சாலைகளில் பழுது
மற்றும் மரண விபத்துகள் தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த
புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இதற்கு மாற்றாக, உலு லங்காட் பகுதியிலுள்ள சாலையைப் பயன்படுத்த
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் காஜாங் நகராண்மைக் கழகம், உலு லங்காட்
நில மற்றும் மாவட்ட அலுவலகம், குவாரி நிறுவனப் பிரதிநிதிகள்
உள்ளிட்ட தரப்பினருடன் நாங்கள் பேச்சு நடத்தினோம். இதன் முடிவில்
அச்சாலையைக் குவாரி லோரிகள் பயன்படுத்த முடியாது என்ற முடிவுக்கு
காஜாங் நகராண்மைக் கழகம் வந்துள்ளது என்றார் அவர்.

இந்த பிரச்சனை ஐந்து ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இச்சாலை
அடிக்கடி சேதமடைவதோடு மரணத்தை விளைவிக்கக் கூடிய
விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

குவாரி லோரிகள் தவிர்த்து அப்பகுதியில் லங்காட் 2 திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்ட குழாய்களை பதிக்கும் பணியும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :