SELANGOR

வர்த்தக வளாகங்களில் எலி பெருக்கத்தைக் கட்டுப்படுத்த எழு பரிந்துரைகள்- எம்.பி.கே. முன்வைத்துள்ளது

ஷா ஆலம், ஜன 6- எலிகளின் பெருக்கத்தைத் தடுக்க உணவு சார்ந்த
வர்த்தக வளாகங்களை நடத்துவோர் கடைபிடிக்க வேண்டிய ஏழு
பரிந்துரைகளைக் கிள்ளான் நகராண்மைக் கழகம் முன்வைத்துள்ளது.

அந்த ஏழு படிநிலைகளில் இரண்டு பிளாஸ்டிக் பைகளுடன் கூடிய
குப்பைத் தொட்டிகளைத் தயார் செய்ய வேண்டும் மற்றும் அவை
பொருத்தமான மூடிகளைக் கொண்டு எந்நேரமும் மூடிவைக்கப்பட
வேண்டும் என்பதாகும் என்று நகராண்மைக் கழகத்தின் வர்த்தக தொடர்புப்
பிரிவு இயக்குநர் நோர்பிஷா மாபிஷ் கூறினார்.

தங்கள் வர்த்தக வளாகங்களை சுத்தப்படுத்துவதற்கு அல்லது கழுவுவதற்குக்
கால அட்டவணையைத் தயார் செய்வதோடு குப்பைகள் மற்றும்
உணவுக் கழிவுகள் நேரடியாகக் கால்வாய்கள் வழி வெளியேற்றுவதைத்
தடுப்பது ஆகியவை அடுத்த பரிந்துரைகளாகும் என அவர் சொன்னார்.

உணவு மூலப் பொருள்கள் வைக்கும் இடம் எந்நேரமும் சுத்தமானதாகவும்
சீரானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதோடு மூன்று
மாதங்களுக்கு ஒரு முறை சான்று பெற்ற பூச்சிக்கொல்லி மருந்து
தெளிக்கும் நிறுவனங்களைக் கொண்டு மருந்து தெளிக்க வேண்டும். இவை
தவிர வர்த்தக நேரம் முடிவுக்கு வந்தவுடன் வளாகம் சுத்தமாக இருப்பதை
உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்ட்டார்.

கடந்தாண்டில் சுத்தத்தை முறையாக பராமரிக்காதக் காரணத்திற்காக 45
உணவகங்கள் 14 நாட்களுக்கு மூடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் 2007ஆம் ஆண்டு உணவு வர்த்தக
லைசென்ஸ் துணைச் சட்டத்தின் 62(1)(பி) பிரிவின் கீழ் அந்த உணவகங்கள்
மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :