அகதிகளுக்கான சட்டவிரோத அடையாள அட்டை 500 வெள்ளிக்கு விற்பனை- குடிநுழைவுத்துறை அம்பலப்படுத்தியது

கோலாலம்பூர், ஜன 7- மியன்மார் நாட்டிலுள்ள சின் சிறுபான்மை இனத்தினருக்கு அகதிகளுக்கு அடையாள அட்டை விநியோகித்து வந்த பதிவு பெறாத அமைப்பு ஒன்றின் நடவடிக்கையை குடிநுழைவு துறையினர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

தலைநகர், ஜாலான் இம்பியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்த அமைப்பின் சட்டவிரோதச் செயல் அம்பலத்திற்கு வந்ததாக குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ட்ஜைமி டாவுட் கூறினார்.

அந்த அமைப்பு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அங்குள்ள அடுக்குமாடி வீடொன்றில் செயல்பட்டு வந்தது அங்குள்ள விளம்பரப் பலகை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த அமைப்பு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் படாத அடையாள அட்டையை சொந்த இயந்திரங்கள் மூலம் தங்கள் அலுவலகத்திலேயே தயாரித்து அதனை பெறுவோருக்கு உறுப்பினர் கட்டணமாக 500 வெள்ளியோடு இதர கட்டணங்களையும் வசூலித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.

அந்த அமைப்பில் சுமார் 1,000 சின் சிறுபான்மை இனத்தினர் உறுப்பினர்களாக உள்ளதும் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட கட்டண வசூலிப்பு ரசீதுகள் மூலம் தெரியவந்துள்ளது என்றார் அவர்.

இந்த அதிரடிச் சோதனை நடவடிக்கை நேற்றிரவு ஆரம்பித்து விடியற்காலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்ததாக சம்பவ இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அந்த சின் சிறுபான்மை இன அகதிகள் மூன்றாம் நாடுகளில் குடியேறுவதற்கான அனுமதிக்காக காத்திருப்பதற்கு அடையாளமாக அந்த அடையாள அட்டைகள் விளங்குகின்றன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :