SELANGOR

“கோ சிலாங்கூர்“ மாநிலச் சுற்றுலா செயலியைக் கிட்டத்தட்ட 2,000 பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்

ஷா ஆலம், ஜன 9: கடந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கப்பட்ட “கோ சிலாங்கூர்“ மாநிலச் சுற்றுலா செயலியைக் கிட்டத்தட்ட 2,000 பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மேலும், அந்த செயலி 6,820 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சுற்றுலா எஸ்கோ ஹீ லோய் சியான் கூறினார்.

“கடந்த ஆண்டு இச்செயலில் உணவு மற்றும் பானங்கள் (F&B), வாழ்க்கை முறை, டிக்கெட் முன்பதிவு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான 313 வணிகர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த வேளையின் இவ்வாண்டு மார்ச் வரை மொத்தம் 1,000 வணிகர்கள் பதிவு செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இதுவரை, “கோ சிலாங்கூர்“ மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், “ஆஃபர் பேக்கேஜ்“ போன்ற சில பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

“கோ சிலாங்கூர்“ மலேசியாவில் தொடங்கப்பட்ட ஒரே சுற்றுலாச் செயலி ஆகும். இதை “Google PlayStore “ மற்றும் “iOS“ மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

சிலாங்கூர் சுற்றுலாவை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களில் ஒன்றான இச்செயலி உள்ளூர் நிறுவனமான டூர்ப்ளஸ் டெக்னாலஜியுடன் இணைந்து RM3 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டது.

இச்செயலியால் நம் நாட்டிற்கு வருகை புரியும் பயணிகள், மாநிலத்தின் சுற்றுலாவைப் பற்றி எளிதில் தெரிந்து கொள்ளலாம் மற்றும் அது பல்வேறு அணுகல்களுக்கான ஒரு மையமாகவும் மாறும்.


Pengarang :