SELANGOR

முகக்கவரி அணியாத உணவகப் பணியாளர்களுக்கு அபராதம்- எம்.பி.ஏ.ஜே. எச்சரிக்கை

ஷா ஆலம், ஜன 9- அம்பாங் ஜெயா வட்டாரத்தில் உணவுகளைக்
கையாளும் பணியில் ஈடுபட்டுள்ள உணவகப் பணியாளர்கள் முகக்கவரி
அணியத் தவறினால் அவர்களுக்கு குற்றப்பதிவு அல்லது அபராதம்
விதிக்கப்படும்.

இதன் தொடர்பான அறிக்கை அம்பாங் ஜெயா வட்டாரத்திலுள்ள
உணவகங்கள் மற்றும் உணவு அங்காடி கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு
விட்ட நிலையில் இந்த அமலாக்க நடவடிக்கை கட்டங் கட்டமாக
அமல்படுத்தப்படும் என்று அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர்
முகமது பவுசி முகமது யாத்திம் கூறினார்.

கட்டாய முகக்கவரி தொடர்பான அறிவிப்பு வர்த்தக லைசென்ஸ்
உரிமையாளர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வாயிலாக
அனுப்பப்பட்டுள்ளதோடு நகராண்மைக் கழகத்தின் அகப்பக்கத்தின்
வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.

உணவகப் பணியாளர்கள் இந்த உத்தரவை மதித்து நடப்பதை உறுதி
செய்ய தாங்கள் தொடர்ந்தாற்போல் சோதனைகளை மேற்கொண்டு
வரவுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

அம்பாங் ஜெயா பகுதிக்கான அனைத்து உணவக மற்றும் உணவு அங்காடி
வியாபார லைசென்சில் இந்த நிபந்தனை ஒரு விதிமுறையாகச்
சேர்க்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பினரும் இதனை பின்பற்றி நடப்பது
அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டாய முகக் கவரி அணியும் உத்தரவை மீறும் தரப்பினருக்கு எதிராக
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் 2007ஆம் ஆண்டு வணிகத்
தொழில்துறை துணைச் சட்டத்தின் 4(4)(சி) பிரிவின் கீழ் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :