NATIONAL

காப்பார் குடியிருப்புப் பகுதியில் சண்டையின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்

ஷா ஆலம், ஜன. 10: கிள்ளான் அருகே உள்ள காப்பார் குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை நடந்த சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 2.04 மணி அளவில் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது என்றும், பாதிக்கப்பட்ட நபர் அப்பகுதியில் உள்ள சாலையில் கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டதாகவும் வடக்கு கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் எஸ் விஜய ராவ் கூறினார்

“முதற்கட்ட விசாரணையில், இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையே சண்டை நடந்திருக்கக் கூடும்   எனச் சந்தேகிக்கப்படுகிறது. அதன் விளைவாக அந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப் பட்டுள்ளார்.

“கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் மருத்துவ உதவியாளரால் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு முக்கிய சந்தேக நபர்களான 20 வயதுடைய உள்ளூர் ஆண்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் இப்போது தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் எனக் கண்டறியப் படுவோர்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப் படலாம் என்றார்.

“சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி உதவி கண்காணிப்பாளர் ஹனிஸையோ 019-9099763 அல்லது 03-32912222 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :