NATIONAL

பெருநாள் சமயத்தில் கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிக்காது- சுகாதார அமைச்சு நம்பிக்கை

புத்ராஜெயா, ஜன 11- பெருநாள் சமயத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுப்
பரவல் அதிகரிக்காது என சுகாதார அமைச்சு நம்புவதாகச் சுகாதாரத் துறை
தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா
கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நாட்டின் எல்லைகள்
மறுபடியும் திறக்கப்பட்டப் பின்னர் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின்
அடிப்படையில் இந்த கணிப்பு வெளியிடப்படுவதாக அவர் சொன்னார்.

கடந்தாண்டு ஏப்ரல் முதல் தேதிக்குப் பின்னர் நோன்புப் பெருநாள்,
ஹாஜ்ஜூப் பெருநாள், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள்
கொண்டாடப்பட்டன. இதுதவிர மலேசியர்களும் புனித யாத்திரையை
முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிவிட்டனர். மேலும் நாட்டின் 15வது
பொதுத் தேர்தலும் நடத்தப்பட்டு விட்டது. இருந்த போதிலும் நோய்த்
தொற்று அதிகரிக்கவில்லை என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற ஊடகத் துறையினருடனான சுகாதார
அமைச்சின் கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று
எண்ணிக்கை 3,000 முதல் 4,000 வரை இருந்த நிலையில் தற்போது அது
குறைந்து கடந்த இரு வாரங்களாக 500க்கும் கீழ் பதிவாகி வருகிறது என்று
அவர் சொன்னார்.

மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து
தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவதை இது புலப்படுத்துகிறது என அவர்
குறிப்பிட்டார்.

கோவிட்-19 நிலவரங்களைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து அணுக்கமாகக்
கண்காணித்து வருவதோடு வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோர்
மத்தியில் புதிய வகை பிறழ்வுகளையும் அடையாளம் காணும்
முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :