SELANGOR

சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவீர்- எம்.பி.கே. வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 11- அபராதம் அல்லது வாகனங்கள் இழுத்துச்
செல்லப்படுவது போன்ற சட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்க
தங்களின் வாகனங்களை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி
வைக்கும்படி பொது மக்களை கிள்ளான் நகராண்மைக் கழகம்
வலியுறுத்தியுள்ளது.

பூங்காக்கள், காலி இடங்கள், நடைபாதை, சைக்கிள் தடம், விளையாட்டு
மைதானம் பொழுது போக்கு பூங்கா போன்ற இடங்களில் வாகனங்களை
நிறுத்துவதற்கு அறவே அனுமதிப்படாது என்று நகராண்மைக் கழகத்தின்
தொடர்பு வர்த்தகப் பிரிவு இயக்குநர் நோர்பிஷா மாபிஸ் கூறினார்.

இது தவிர, சாலையின் மத்தியில் உள்ள தடுப்புகள், சாலை ரிசர்வ்
இடங்கள், வடிகால் மற்றும் கால்வாயின் கரைகள், நகராண்மைக்
கழகத்தின் பராமரிப்பில் உள்ள இடங்களிலும் வாகனங்களை
நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

தாமான் எங் ஆன்னில் உள்ள டேவான் எங் ஆன் திடலில் வாகனங்களை
நிறுத்தியதற்காக வாகனங்களுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் தலா
1,000 வெள்ளி அபராதம் விதித்தது தொடர்பில் 30 வாகனமோட்டிகள்
தங்களின் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில்
2005ஆம் ஆண்டு கிள்ளான் நகராண்மைக் கழக துணைச் சட்டத்தின் 8(1)
பிரிவின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நோர்பிஷா விளக்கினார்.

சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகளுக்கு குற்றப்பதிவுகளை வெளியிட்ட
நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கையை வட்டார மக்கள்
வரவேற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

வாகனங்களை திடலில் நிறுத்தியது பொறுப்பற்றச் செயல் என்பதோடு
இதனால் தங்கள் வசிப்பிடத்தில் உள்ள திடலுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது
என்று அவர் தெரிவித்துள்ளனர் என்றார் அவர்.


Pengarang :