SELANGOR

பத்தாங் காலி நிலச்சரிவில் உயிரிழந்த அறுவரின் குடும்பத்திற்கு இன்சான் காப்புறுதி இழப்பீடு

ஷா ஆலம், ஜன 11- பத்தாங் காலி ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பகுதியில்
கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அறுவர் சிலாங்கூர்
மாநில அரசின் பொது காப்புறுதியைப் (இன்சான்) பெறுவதற்குத் தகுதி
பெற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த அறுவரின் குடும்பத்தினருக்கும் தலா 10,000 வெள்ளி
இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு விரைவில் ஒப்படைக்கும் என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த பேரிடரில் உயிரிழந்த 31 பேர் இன்சான் காப்புறுத் திட்டத்தின்
வாயிலாக இழப்பீடு பெறுவதற்குரியத் தகுதியைப் பெற்றுள்ளதை நாங்கள்
கண்டறிந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த காப்புறுதித் திட்டத்தில் பதிவு செய்யும் பட்சத்தில் பொது மக்கள்
உரிய பலனைப் பெற முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக
விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் 2023ஆம் ஆண்டிற்கான முக்கிய
உரையை நிகழ்த்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை மாநிலத்திலுள்ள 35 லட்சத்து 60
ஆயிரம் பேர் இன்சான் காப்புறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளதாக மந்திரி
புசார் அண்மையில் கூறியிருந்தார்.

மாநிலத்திலுள்ள 60 லட்சம் குடிமக்களை இலக்காக கொண்ட இந்த திட்டம்
கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம்
பிறந்து 30 நாள் ஆன குழந்தைகள் முதல் 80 வயதான முதியவர்கள் வரை
இலவசக் காப்புறுதியைப் பெற முடியும்.


Pengarang :