SELANGOR

பிங்காஸ் திட்டத்தின் வழி 25,000 குடும்பங்களுக்கு மாதம் வெ.300 உதவித் தொகை- டத்தோ தெங் தகவல்

ஷா ஆலம், ஜன 17- சிலாங்கூர் அரசினால் கடந்தாண்டு ஜூலை மாதம்
ஆரம்பிக்கப்பட்ட சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்)
வாயிலாகக் குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்கள் மாதம் 300
வெள்ளி உதவித் தொகையைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளன.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மாநில அரசினால்
உருவாக்கப்பட்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.)
முன்னெடுப்பில் இந்த பிங்காஸ் திட்டமும் உள்ளடங்கியுள்ளதாகத்
தொழிலியல் மற்றும் வர்த்தக துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்த பிங்காஸ் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்னும்
வரவேற்கப்படுகின்றன. சுமார் 30,000 குடும்பங்கள் இத்திட்டத்தின்
வாயிலாக பலன் பெறும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும்
தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இதற்கு மேலும்
உயராமல் நிலையாக இருந்தால் மக்களின் பொருளாதார நிலை உயர்ந்து
விட்டது என பொருள் கொள்ளலாம்.

நாங்கள் மக்களுக்குத் தொடர்ந்து உதவ தயாராக இருக்கிறோம். எனினும் இது அவர்களின் பொருளாதாரம் சார்ந்த விஷயமாக உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடாது என எதிர்பார்க்கிறோம் என செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசு முன்பு அமல்படுத்திய ஸ்மார்ட் சிலாங்கூர் ஈபு காசே(கிஸ்)
மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான கிஸ் ஐ.டி ஆகிய
திட்டங்களுக்கு மாற்றாக இந்த பிங்காஸ் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.பி. எனும் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின்
ஒரு பகுதியாக விளங்கும் இந்த பிங்காஸ் திட்டத்திற்கு மாநில அரசு 10
கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :