SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை மே மாதம் வரை தொடரும்- பி.கே.பி.எஸ். கோடி காட்டியது

கிள்ளான், ஜன 18- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் முடிவைப் பொறுத்து வரும் மே மாதம் வரை நீடிக்கப் படுவதற்கான சாத்தியம் உள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் வழிநடத்தப்படும் இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் (ஜே.இ.ஆர்.) திட்டத்தின் இரண்டாம் கட்ட விற்பனை நேற்று தொடங்கியதாக அக்கழகத்தின் தொடர்பு வியூக நிர்வாகி நோர் அஸ்ரினா அப்துல் அஜிஸ் கூறினார்.

இந்த திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருவதால் அடிப்படையில் இதனை தொடர்ந்து நடத்துவதற்குரிய சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.

தற்போதைய பொருள் விலையேற்றம் காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த மலிவு விற்பனைத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் இந்த திட்டத்தை வரும் மே மாதம் வரை தொடர திட்டமிட்டுள்ளோம். நேற்று இங்குள்ள கம்போங் செமெந்தாவில் நடைபெற்ற செமெந்தா தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் தினசரி ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் இந்த மலிவு விற்பனையை பி.கே.பி.எஸ். நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விற்பனை இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது. காரணம் எங்கள் வசம் ஒன்பது லோரிகள் மட்டுமே உள்ளன. அவை தினமும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்பது தொகுதிகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன என்று அவர் விளக்கினார்.

விற்பனை பொருட்கள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதோடு இது குறித்த முடிவை பி.கே.பி.எஸ். நிர்வாகம் பின்னர் அறிவிக்கும் என்றார் அவர்.


Pengarang :