SELANGOR

புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் சாலை சீரமைப்பு- இன்ஃப்ராசெல் நடவடிக்கை

ஷா ஆலம், ஜன 18- பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்த 24 மணி
நேரத்தில் கஞ்சோங், ஜாலான் ரெசாக்கில் காணப்பட்ட சாலை பழுதை
இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் நிறுவனம் சீரமைத்தது.

டிவிட்டர் வாயிலாக கடந்த திங்கள்கிழமை புகார் கிடைத்ததைத்
தொடர்ந்து கோல லங்காட் மாவட்டத்திலுள்ள அந்த சாலையைச்
சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக மாநிலத்தில் சாலை பராமரிப்பு
பணிகளுக்குப் பொறுப்பேற்றுள்ள அந்நிறுவனம் தெரிவித்தது.

புகார் கிடைத்த அன்றைய தினமே பழுதுபார்ப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டன என்று அந்நிறுவனம் தனது டிவிட்டர் பதவின் வழி
கூறியது.

சாலையில் ஏற்பட்டுள்ள பழுது தொடர்பான புகார்களை டிவிட்டர்
வாயிலாக தங்களிடம் தெரிவிக்கும்படி அந்நிறுவனம் பொது மக்களைக்
கேட்டுக் கொண்டது.

சிலாங்கூர் மாநில அரசின் வசமுள்ள சாலைகளைப் பழுதுபார்ப்பது மற்றும்
விரிவாக்கம் செய்யும் பணிக்காக மாநில அரசு 5 கோடி வெள்ளியை
ஒதுக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று
முன்தினம் கூறியிருந்தார்.

வாகனமோட்டிகளின் வசதிக்காக மாநிலத்திலுள்ள சாலைகளைச்
சீரமைக்கும் பணி வரும் மார்ச் மாதம் தொடங்கி பெரிய அளவில்
மேற்கொள்ளப்படும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :