NATIONAL

காவல்துறையில்  ஒருவருக்கு 4,000 வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள தங்க நகையைக் கையூட்டாக வழங்கிய நபருக்கு அபராதம்

அலோர்ஸ்டார், ஜன 18: கடந்த ஆண்டு செப்டம்பரில் காவல்துறையில் ஒருவருக்கு 4,000  வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள தங்க நகையைக் கையூட்டாக வழங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட மினி மார்க்கெட் தொழிலாளிக்கு  இன்று செஷன்ஸ் நீதிமன்றம் RM30,000 அபராதம் விதித்தது.

நீதிபதி ரோஹத்துல் அக்மர் அப்துல்லா, 26 வயதான வி.சஞ்சீவ் மீதான தண்டனையை நிறைவேற்றினார், மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் 12 மாதங்கள் சிறை தண்டனையும் , அதே நேரத்தில் அந்த தங்க நகையை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டின் படி, கெடா கொன்டிஜென்ட் காவல்துறை தலைமையகத்தில் உள்ள போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியில் இருக்கும் சப் இன்ஸ்பெக்டர் அப்துல்லாஹ்திப் அப்துல்லாவுக்கு சஞ்சீவ் RM4,649.95 மதிப்புள்ள தங்க நெக்லஸைக் கையூட்டாக வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 யின் பிரிவு 39A (1)இன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய மெத்தாம் பேட்டமைனை வைத்திருந்த குற்றத்திற்காக அவரை விடுவிக்க இந்த நகையை கையூட்டாக கொடுக்கும் நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.

சஞ்சீவ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் ஜாலான் செப்புலுவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் இந்தச் செயலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தண்டனைச் சட்டப் பிரிவு 214 இன் கீழ் குற்றமாகும்.

வழக்கு விசாரணையை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) துணை அரசு வக்கீல் ரெஹாப் அப்துல் ஷுக்கூர் கையாண்டார், அதே சமயம் சஞ்சீவ் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் அபராதம் செலுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :