SELANGOR

ஷா ஆலம் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை எம்.பி.ஐ. வழங்கியது

ஷா ஆலம், ஜன 19 -  சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பு ( எம்.பி.ஐ.) 9,000 வெள்ளி  மதிப்புள்ள தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் (ஏ.இ.டி.) அவசர 
உதவி உபகரணங்களை ஷா ஆலம் மருத்துவமனையிடம் ஒப்படைத்துள்ளது.

இதன் தொடர்பான விண்ணப்பத்தை மருத்துவமனை நிர்வாகம்  கோத்தா 
அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமியிடம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து  
இந்த உதவி வழங்கப்பட்டதாக அதன் நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் 
அகமது அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு, குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 
பயன்படுத்தக்கூடிய ஏ.இ.டி. நடமாடும் அவசர உதவி உபகரணத்தை ஷா ஆலம் 
மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம். சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் 
எங்களை அணுகி இந்த மருத்துவ உதவியைக் கோரினார். 

மேலும், சிகிச்சை செயல்முறையை எளிதாக்க ஷா ஆலம் மருத்துவமனைக்கு 
உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதில் நாங்கள் மிகவும் 
மகிழ்ச்சியடைகிறோம் அவர் சொன்னார்.

நேற்று மருத்துவமனையின் வரவேற்புக் கூடத்தில்  இந்த ஏ.இ.டி. உபகரணங்களை  
ஒப்படைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மருத்துவ உபகரணங்களுக்கான கோரிக்கைகளை எம்.பி.ஐ.க்கு நேரடியாகவோ 
அல்லது மாநில பிரதிநிதிகள் மூலமாகவோ சமர்ப்பிக்க மருத்துவமனைகள் 
வரவேற்கப்படுகின்றன என்று அகமது அஸ்ரி கூறினார்.

மற்ற மருத்துவமனைகளில் இதே போன்ற தேவைகள் இருந்தால்  மாநில அரசு மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைப்புடன் அதனை நிறைவேற்ற முடியும் என்றார் அவர்.

இதற்கிடையில், தமது கோரிக்கையை அங்கீகரித்ததற்காக எம்.பி.ஐ.க்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நஜ்வான்  தெரிவித்தார். இதன் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைகளை எளிதாக்க முடியும் என்று அவர் சொன்னார்.

Pengarang :