தேசிய கல்வி குழுவில்  தமிழருக்கான இட விவகாரம் குறித்து கல்வி  அமைச்சரிடம் பேசியதாக துணை அமைச்சர் தகவல்

ஷா ஆலம்,  22 ஜனவரி;-   மலேசிய இந்தியர்களிடம் எப்பொழுதும்  ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி அல்லது உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.  இப்பொழுது புதிய விவகாரமாக  தேசியக் கல்வி குழுவில் ஏன் தமிழர் இடம் பெறவில்லை?  ஒரு சீக்கியருக்கு  தமிழ்ப்பள்ளியின் மீது என்ன அக்கறை? அவருக்குத் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து என்ன தெரியும் என்று  கேள்வி  எழுப்பினர்..

இதில்  ஒரு வேடிக்கை  என்ன வென்றால்  அந்த விவகாரத்துக்கு  எப்படி எங்கே தீர்வு  காண்பது என்பதை விட,  பிரதமர் மற்றும் பக்காத்தான்  ஹராப்பானுக்கு எதிராகக் கண்டனங்களை  வெளியிடுவதில்  பலர்  ஆர்வம் காட்டியதுதான்.

அதில் ஒருவர்,  அன்வார் தனது நண்பர் என்றும்  இந்தியர்கள் பிரச்சனைகளை  அவர் பார்த்துக் கொள்வார் என்ற  இரட்டை  அர்த்தத்தில்  வாட்ஸ் ஆப்பில் கருத்துரைத்துள்ளார்.  ஒரு முன்னாள்  அமைச்சரான அவருக்கு,  அரசாங்கம் எப்படிச் செயல்படுகிறது என்பது தெரிய வில்லையா? இல்லை  அவர்  இந்தியர்களைத் தூண்டிவிடுகிறாரா? அவரின் நோக்கம் என்ன  என்பதை  பல தமிழர்கள்  உணர்ந்தே  உள்ளனர்.

ஒரு சிலர் இன்னும் 6 மாதங்களுக்குள் நடக்க இருக்கும்  சிலாங்கூர்  உட்பட  6 மாநிலத் தேர்தலுக்கு முன் இந்தியர்களிடம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி குளிர்காய  முயற்சிப்பதாகத் தெரிகிறது.

ஆனால் அந்தக் கூட்டத்தினர்  முயற்சியை லாபகரமாக முறியடித்து விட்டார் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் க. சரஸ்வதி.

அவர்  சனிக்கிழமை 21 ந்  தேதி   வெளியிட்டுள்ள அறிக்கையின்படி  தேசிய கல்வி குழுவில்  தமிழருக்கான இட விவகாரம் குறித்து  தான் கல்வி  அமைச்சரிடம்  பேசியதாகவும், கல்வி  அமைச்சரும் அதற்கு விரைவில் தீர்வு காண உறுதி அளித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்குச் சரியான நேரத்தில்  சரியான விளக்கம் அளித்துள்ள  துணை அமைச்சரைப் பாராட்டவே வேண்டும். அதே நேரத்தில், ” சிலாங்கூர்இன்று”   மேற்கொண்ட ஆய்வின் படி  இந்தக் கூட்டு அரசாங்கத்தில்  சுமார் 30 அமைச்சுக்கள் மற்றும் அதற்கான பல்வேறு செயல் குழுவுடன் அமைச்சர்கள்  உள்ளனர்.

ஆக, அமைச்சர்கள், அவரவர் அமைச்சில் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசித்து செயல் படவும், அரசு அதிகாரிகள்  பரிந்துரைக்கும்  சரியானவர்கள்  பதவிகளில்  நியமிக்கவும் அவர்களுக்கு  அதிகாரமுண்டு..
எதற்கு எடுத்தாலும்,  பிரதமரின் அனுமதியைப் பெற வேண்டும்  என்ற கட்டுப்பாடு  இல்லை..
மற்றொன்று இந்தியர்களிடம் உள்ள உட் பிரிவுகளின் தன்மை பற்றி சரியாக  அறியாதவர்களாக  பல அதிகாரிகள்  இருக்கிறார்கள்,  அதாவது  அனைவரையும்  இந்தியர்களாகவே  பார்க்கிறார்கள். நாம் பார்க்கும்  உட்பிரிவுகளான  தெலுங்கர், பஞ்சாபி ,  தமிழர் , மலையாளி அல்லது ஸ்ரீ லங்கா தமிழர் என்பதைப் பற்றி சற்றும்  அறியாதவர்களாக பலர் இருக்கின்றனர்,

அதன்  அடிப்படையில் கல்வி  அமைச்சின் அதிகாரிகள் முன்மொழிந்த ஒருவரைக்  கல்வி ஆலோசனை மன்றத்தில்  அமைச்சர் நியமித்துள்ளார். அதில் சமுதாயத்திற்கு  உடன்பாடு இல்லை என்றால் , அதை முறையாக   அமைச்சருக்கோ அல்லது பிரதமரிடமோ  கோரிக்கையாக  வைக்கலாம்.

மற்றொரு காரணம்  தமிழர்களின்  அமைப்பு  எனப்  பிரசித்தி பெற்ற அமைப்புகளைப் பற்றியும்  அவர்களுக்குத்  தெரியவில்லை..  அதை நாம்  ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. எப்போதும் நாம் நமது இயலாமைக்கு மற்றவர்களை  குறை கூறுவதும்,  சிறிது காலத்தில்  அதை மறந்து விடுவதும்,  மீண்டும்  ஒரு பிரச்சனை  எழும் போது  இன்னொரு  குழு  கூக்குரல்  எழுப்புவதாக  உள்ளதே தவிர நிலையான அமைப்பை  உருவாக்க   நாம்  தவறி வருகிறோம்  என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Pengarang :