MEDIA STATEMENT

பாண்டான் இண்டாவில் காரைச் சேதப்படுத்திய காதல் ஜோடி கைது

கோலாலம்பூர், ஜன 24- பாண்டான் இண்டா, தாமான் லெம்பா ஜெயாவில் வாகனம் ஒன்றைச் சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 45 வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஸ்க்ரு டிரைவர் மற்றும் சாவி ஆகிய பொருள்களை கைப்பற்றியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரூக ஏஷாக் கூறினார்.

கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மெர்சிடிஸ் பென்ஸ் ஏ200 ரக காரின் நான்கு டயர்களும் துவாரமிடப்பட்டதோடு பின்விளக்குகள் உடைக்கப்பட்டு கார் முழுவதும் கீறி சேதப்படுத்தப்பட்டது தொடர்பில் தாங்கள் அந்த உரிமையாளர் போலீசில் புகார் செய்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

தன்னைத் திட்டிய அந்த காரின் உரிமையாளர் மீது கோபம் கொண்டு அத்தம்பதியர் இந்த அடாத செயலைப் புரிந்தது விசாரணையில் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்தம்பதியர் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர்கள் பென்ஸோ வகை போதைப் பொருளை உட்கொண்டிருந்தது தெரிய வந்தது என அவர் மேலும் சொன்னார்.

கைதான அந்த ஆடவர் மீது மூன்று பழைய குற்றப்பதிவுகளும் அப்பெண் மீது ஒரு குற்றப்பதிவும் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

கீழறுப்பு செயலில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டத்தின் 427வது பிரவின் கீழ் அவர்கள் இருவரும் வரும் 26ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :