SELANGOR

இந்தியன் செட்டில்மெண்ட் பகுதி மார்ச் மாதம் தரம் உயர்த்தப்படும்

கோம்பாக், ஜன 25- பத்துகேவ்ஸ், இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியைத்
தரம் உயர்த்தும் பணி வரும் மார்ச் மாதம் தொடங்கி
மேற்கொள்ளப்படவுள்ளது.

மொத்தம் 59 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் கீழ்
அப்பகுதியில் சாலை சீரமைப்பு மற்றும் சாலை விளக்குகளைப்
பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டம் வரும் மார்ச் மாதம் தொடங்கப்பட்டு மூன்று அல்லது நான்கு
மாதங்களில் முற்றுப்பெறும். என அவர் சொன்னார்.

இத்திட்டத்தின் மூலம் இங்குள்ள மக்கள் பயன்பெறுவர். இவர்கள்
அனைவரும் சுதந்திரத்திற்கு முன்பிருந்து இங்கு வசித்து வருகின்றனர்.
தானா மிலாயுவில் வேலை செய்த அவர்களுக்கு இங்கேயே வசிப்பிட
வசதியும் வழங்கப்பட்டது என்றார் அவர்.

சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில்
இங்குள்ள பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் மண்டபத்தில்
நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ முகமது யாஸிட்
சாய்ரி, இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர் சங்கத் தலைவர்
வீ.சுப்பிரமணியம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தீர்வு காணப்படாமலிருக்கும்
70 லாட் நிலங்களை மறுஒருங்கமைப்பு செய்வதையும் இந்த திட்டம்
உள்ளடக்கியுள்ளது என்று அமிருடின் சொன்னார்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆற்றோரத்தில் வசித்து வரும் 26
குடும்பங்கள் ரவாங், பத்து ஆராங்கில் கடந்தாண்டு வழங்கப்பட்ட
நிலத்திற்கு மாற்றாகிச் செல்வர் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் இப்பகுதியில் மறுசீரமைப்பு
மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அப்போது ஒரு பகுதியை மட்டும் அப்பணி
உள்ளக்கியிருந்தது. இப்போது நாங்கள் அடிப்படை வசதிகளை
முழுமைப்படுத்த விரும்புகிறோம். அந்த 26 குடும்பங்களை பத்து
ஆராங்கிற்கு மாற்றும் நடவடிக்கை காரணமாக இத்திட்ட அமலாக்கத்தில்
தாமதம் ஏற்பட்டது என்று அவர் விளக்கினார்.

ஆகவே, சாலையை இடமாற்றம் செய்வதற்கு ஏதுவாக அவர்களை இடம்
பெயரும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்விஷயத்தில் அவர்கள்
ஒத்துழைப்பு வழங்காவிடில் அப்பகுதியில் தரம் உயர்த்தும் பணிகளை
மேற்கொள்ள இயலாது என்றார் அவர்.


Pengarang :