NATIONAL

புருணையில் உள்ள மலேசியர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

பண்டார் ஸ்ரீ பகவான், ஜன 25- இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை
மேற்கொண்டு புருணை வந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,
நேற்றிரவு இங்கு நடைபெற்ற மலேசியர்களுடனான சந்திப்பு நிகழ்வில்
கலந்து கொண்டார்.

இங்குள்ள மலேசிய தூதரகத்தில் நடைபெற்ற இந்த இரவு விருந்தில் அவர்
வருகையாளர்கள் மத்தியில் முக்கிய உரை நிகழ்த்தியதோடு
அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கேற்றார். இந்த
நிகழ்வில் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.

அன்வார் தமதுரையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி தாம்
அறிமுகப்படுத்திய “நாகரீக மலேசிய“ கோட்பாடு உள்ளிட்ட
மலேசியாவுக்கான தனது திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அனைத்துலக அரங்கில் மலேசியாவின் புகழையும் நற்பெயரையும்
பரிமளிக்கச் செய்வதற்கான முக்கிய இலக்காக அந்த கோட்பாடு
விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு செயல்பாடும் இன்றி சுலோகங்களை மட்டும் வெறுமனே
முழங்கிக் கொண்டிருக்க தமது தலைமையிலான அரசாங்கம்
விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

நான் புதிய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். வெற்று சுலோகம்
மட்டும் தேவையில்லை. அதனை போற்றவும் செயல்படுத்தவும் வேண்டும்.
அதே போல் உண்மை, நீதி, ஒற்றுமை கட்டிக்காக்கப்பட வேண்டும்.
சுலோகங்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் மலேசியர்கள்
சலிப்படைந்து விட்டனர் என்றார் அவர்.

மாநிலங்களில் புதிய பொருளாதார துறைகளைக் கண்டறிவதன் மூலம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதே அரசாங்கத்தின்
தலையாயக் குறிக்கோளாகும் என்றும் அவர் சொன்னார்.

மலேசிய-புருணை ஒத்துழைப்பு குறித்து பேசிய அன்வார், பல்வேறு
துறைகளில் இரு நாடுகளும் அணுக்கமான ஒத்துழைப்பை நல்க முடியும்
என்றார்.


Pengarang :