SELANGOR

சிலாங்கூரில் ஒற்றுமை மற்றும் அமைதியைப் பேணிக்காப்பீர்- மந்திரி புசார் வேண்டுகோள்

கோம்பாக், ஜன 25- சிலாங்கூர் மாநில மக்கள் வெளிப்படுத்தி வரும்
ஒற்றுமை உணர்வு குறித்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
பெருமிதமும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

மக்களின் நலனுக்காக இந்த ஒற்றுமை உணர்வு தொடர்ந்து
கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று சுங்கை துவா சட்டமன்ற
உறுப்பினருமான அவர் வலியுறுத்தினார்.

நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த நிகழ்வின் வரவேற்பாளர்
ஒருவர் மலாய் பாரம்பரிய உடை அணிந்து பல்லினங்களைச் சேர்ந்த
வருகையாளர்களை வரவேற்றார். சிறப்பான நட்புறவையும் ஒருவர் மீது
ஒருவர் காட்டி வரும் கனிவான ஒத்துழைப்பையும் இங்கு காண்கிறேன்
என்றார் அவர்.

சிலாங்கூர் தொடர்ந்து அமைதியான மாநிலமாக விளங்குவதை உறுதி
செய்ய இந்த ஒற்றுமை உணர்வு தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்
என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுங்கை துவா தொகுதியில் நேற்று நடைபெற்ற சீனப்புத்தாண்டு பொது
உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் குறிப்பிட்டார்.

பெருநாள் காலத்தின் போது சீனச் சமூகத்தினரின் நிகழ்வுகளில் கலந்து
கொள்வதை தாம் வழக்கமான நடைமுறையாகக் கொண்டுள்ளதாக அவர்
மேலும் சொன்னார்.

சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினராக (முன்பு பத்துகேவ்ஸ்)
பதவியேற்றது முதல் இந்த நடைமுறையை நான் கடைபிடித்து
வருகிறேன். நண்பர்களையும் அடிமட்டத் தலைவர்களையும் அவர்களின்
இல்லங்களுக்குச் சென்று சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்
என்றார் அவர்.

நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற தலைவர்கள் இந்த
வருகையின் போது உடனிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இது அடிமட்ட மக்களுடனான உறவை வலுப்படுத்துவதுடன் அவர்களின்
முயற்சிகளை அங்கீகரிப்பதன் அடையாளமாகவும் இது விளங்கிறது என்று
அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :