NATIONAL

தஞ்சோங் லொம்பாட் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 35 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

ஜொகூர் பாரு, ஜன 25: நேற்று மதியம் தஞ்சோங் லொம்பாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோத்தா திங்கி முகாம் தளத்தில் முகாமிட்டிருந்த சுமார் 35 பேர் சிக்கிக் கொண்டனர்

பிற்பகல் 2.19 மணி அளவில் தனது தரப்புக்கு இதன் தொடர்பாக அவசர அழைப்பு வந்ததாகப் பெனாவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் மஸ்ரி இப்ராஹிம் கூறினார்.

அதைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகக் கருவிகளுடன் ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“முகாமிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் முக்கிய வழி வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்ததில் நீர் ஓட்டம் 20 அடி (6.1 மீட்டர்) அகலமாக மாறியது. இதனால் வாகனங்கள் அங்கிருந்து வெளியேறுவது கடினமாக இருந்தது.

தீயணைப்புத் துறையினர் பின்னர் ஒரு தங்கும் விடுதி அருகில் உள்ள மாற்று வழியைத் திறந்தனர். இதனால் சிக்கிய வாகனங்கள் கடற்கரைச் சாலையைப் பயன்படுத்தி பிரதான சாலைக்குச் செல்ல முடியும்” என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள், 12 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 12 சிறுவர்கள் ஆவர். இச்சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் அனைவரும் வீடுகளுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப் பட்டதாக மஸ்ரி கூறினார்.

இச் சம்பவத்தில் சிக்கிய 16 வாகனங்களும் மாற்றுப் பாதையில் செல்ல முடிந்தது என்றார். இன்று இரவு 7.50 மணிக்குச் சோதனை நடவடிக்கை முழுமையாக முடிவடைந்தது.

– பெர்னாமா


Pengarang :