SELANGOR

“கெர்பாங் மெரிடிம்“ பொருளாதார மண்டலத்தில் சிலாங்கூர் கூ, கலாசார மையத் திட்டங்களுக்கு முன்னுரிமை

ஷா ஆலம், ஜன 25- “கெர்பாங் மெரிடிம்“ எனப்படும் சிலாங்கூர் கடல் சார்
நுழைவாயில் பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் பூர்வாங்க
மேம்பாட்டுத் திட்டங்களாகச் சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டம் மற்றும்
கலாசார மையம் ஆகியவை அமையும்.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இவ்விரு
மேம்பாட்டுத் திட்டங்களுக்கான திட்டமிடல் அனுமதிக்காக விண்ணப்பம்
செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

வீடமைப்பு சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு
கிள்ளான் ஆற்றோரம் நெடுகிலும் உள்ள நிலங்கள் கூடுதல் ஊக்குவிப்பாக
விளங்கும் என்று அவர் சொன்னார்.

இந்த முன்னெடுப்பின் வாயிலாக முதல் கட்டமாக சிலாங்கூர் கூ
வீடுகளும் கலாசார மையமும் நிர்மாணிக்கப்படும். கோலாலம்பூர் எல்லை
தொடங்கி சிலாங்கூர் மற்றும் கிள்ளான் ஆற்றின் முகத்துவாரம் வரை
ஆற்றின் எல்லைகள் நீண்டுள்ளதால் இந்த திட்டத்தை அமல்படுத்த சிறிது
கால அவகாசம் தேவைப்படும் என அவர் தெரிவித்தார்.

பிரதேச மேம்பாட்டுத் திட்டத்தை அடிப்படையாக கொண்ட மேம்பாட்டுத்
திட்டங்களுக்காக சில வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
கடநதாண்டு முதலாவது சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்த போது
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.

அந்த மேம்பாட்டுத் திட்டங்களில் சிலாங்கூர் கெர்பாங் மெரிடிம்
பொருளாதார மேம்பாட்டு மண்டலம், தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த
மேம்பாட்டுத் திட்டம், சபாக் பெர்ணம் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவையும்
அடங்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :