NATIONAL

டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு சதவீதம் குறைந்துள்ளது

புத்ராஜெயா, ஜன 26: ஜனவரி 15 முதல் 21 வரையிலான இந்த ஆண்டின் மூன்றாவது தொற்றுநோயியல் வாரத்தில் (ME3/23) டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு சதவீதம் அல்லது 2,319 ஆக குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 2,520 இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டிங்கிக் காய்ச்சலால் ஒருவர் மரணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 2,165 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்த வேளையில் இவ்வாண்டு இந்த மொத்த எண்ணிக்கை 7,058 ஆக உள்ளது. இது 226 சதவீதம் அல்லது 4,893 சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும், இதில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

“கடந்த வாரத்தில் 67 ஹாட்ஸ்பாட் இடங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன; ஆனால், தற்போது அது 80 இடங்களாக அதிகரித்துள்ளது. அவை சிலாங்கூரில் 50, சபாவில் 14, கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் ஒன்பது மற்றும் பினாங்கில் ஏழு ஆகும்.

மேலும், அவ்வாரத்தில் 11 சிக்குன்குனியா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கெடா, பினாங்கு மற்றும் சிலாங்கூரில் தலா மூன்று சம்பவங்கள் மற்றும் பேராக்கில் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று வரை மொத்தம் 47 சிக்குன்குனியா சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குடியிருப்பு பகுதிகள், பணியிடங்கள் மற்றும் பார்வையிட விரும்பும் பிற பகுதிகளில் டிங்கி நிலையைக் குறித்து தெரிந்து கொள்ள iDengue இணையதளத்தை (https://idengue.mysa.gov.my/) நாடுங்கள்

– பெர்னாமா


Pengarang :