குறைந்த விலையில் பொருள்கள் வாங்க ஏழாவது முறையாக மலிவு விற்பனைக்கு வந்தேன்- இல்லத்தரசி பேட்டி

கோம்பாக், ஜன 26- பள்ளி செல்லும் பிள்ளைகளின் தேவையை கவனிப்பது,
உள்ளிட்ட குடும்பச் சுமைகளை சுமக்க வேண்டிய நிர்பந்தம் இருந்த
போதிலும் மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தில்
அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில் வாங்குவதற்கான
வாய்ப்பினை இல்லத்தரசி ஒருவர் ஒருபோதும் நழுவ விட்டதில்லை.

சிலாங்கூ மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.)
ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மலிவு விற்பனையில் தாம் ஏழாவது
முறையாக பங்கேற்பதாக நோராஸிசா மாட் ரிப்பின் (வயது 49) கூறினார்.

எனது வீட்டிற்கு அருகே நடைபெறும் மலிவு விற்பனைகளில்
பங்கேற்பதற்காக நேரத்தை ஒதுக்குவதை நான் கடந்தாண்டு முதல்
வழக்கமாக கொண்டுள்ளேன்.

இன்று காலையில்கூட 7.30 மணிக்கெல்லாம் இங்கு வந்த போதிலும்
எனக்கு முன்பாக பலர் வரிசையில் காத்திருந்தனர். இருந்த போதிலும்,
எல்லா சமையல் பொருள்களையும் வாங்கும் வாய்ப்பு கிட்டியதோடு
கணிசமான தொகையையும் மிச்சப்படுத்த முடிந்தது என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற சுங்கை துவா தொகுதி நிலையிலான மலிவு
விற்பனையின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, தாம் ஒரு தட்டு முட்டை, ஒரு கோழி, ஒரு போத்தல்
சமையல் எண்ணெய், இரு மூட்டை அரிசியை வாங்க வெறும் 65.000
வெள்ளியை மட்டுமே செலவிட்டதாக ஓய்வு பெற்ற பணியாளரான
எம்.சுப்பிரமணியம் (வயது 71) கூறினார்.

உண்மையில் இங்கு மலிவான விலையில் பொருள்கள் விற்கப்படுகின்றன.
இதே பொருள்களை பேரங்காடியில் வாங்கியிருந்தால் 100 வெள்ளி வரை
செலவு பிடித்திருக்கும் என்று அவர் சொன்னார்.

பொருள்களின் விலை நிலைபெறும் வரை இந்த விற்பனையை மாநில
அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.ஏனென்றால் எங்களைப் போன்ற வசதி குறைந்த தரப்பினருக்கு பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.

இதனிடையே, இந்த மலிவு விற்பனையை மாநில அரசு தொடர வேண்டும்
என்று சுங்கை துவா, கம்போங் மக்கோத்தாவைச் சேர்ந்த இம்ரானி
உஸ்மான் (வயது 65) தெரிவித்தார்.


Pengarang :