NATIONAL

திருட வந்த வீட்டில் மதுபோதையில் உறங்கிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஜெலுபு, ஜன 26- திருட வந்த வீட்டில் இருந்த மதுவைக் குடித்து போதையில் அவ்வீட்டிலேயே உறங்கிப் போன ஆடவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் நோர்ஷஸ்வானி இஷாக் முன்னிலையில் தமக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை பி. ராமன் (வயது 41) என்ற அந்த நபர் மறுத்து விசாரணை கோரினார்.

இம்மாதம் 23ஆம் தேதி அதிகாலை 6.30 மணியளவில் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கில் ஜெம்போல், தாமான் தஞ்சோங் பூங்காவிலுள்ள வீடொன்றில்அத்துமீறி நுழைந்ததாக அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டுச் சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 448வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது நிறைய முந்தையக் குற்றப்பதிவுகள் உள்ள காரணத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் அகமது லோக்மான் ஹக்கிம் அகமது நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

தமது சார்பில யாரும் ஆஜராகாத நிலையில் ராமன் தமக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு மாதம் 1,000 வெள்ளி சம்பளத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வரும் தாம் வயதான தாயாரைப் பராமரிக்கும் பொறுப்பையும் கொண்டிருப்பதாகக் கூறினார்.

இரு நபர்கள் உத்தரவாதத்துடன் 16,000 வெள்ளி ஜாமீனில் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம் அடுத்த மாதம் 22ஆம் தேதி மறுவிசாரணை நடைபெறும் வரை மாதம் ஒருமுறை ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.


Pengarang :