ஈராண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூடு பிடித்தது காவடித் தயாரிப்புத் தொழில்

கோலாலம்பூர், பிப் 1- கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக இருள்மயமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்த காவடித் தயாரிப்புத் தொழில் இவ்வாண்டில் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தைப்பூசத்தின் போது காவடி ஏந்தி இறைவனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டில் அத்தடைகள் அகற்றப்பட்டு பக்தர்கள் காவடி எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பக்தர்கள் மத்தியில் காவடிக்கான தேவை அதிகரித்துள்ளதால் வரும் 5ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவுக்காக காவடிகளைத் தயாரிக்கும் பணியில் அதனைத் தயாரிப்போர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைய சில மாதங்களாகவே காவடிக்கான ஆர்டர்கள் ஊக்கமூட்டும் வகையில் கிடைத்து வந்த  நிலையில் இதற்கு மேலும் சமாளிக்க முடியாது என்ற நிலையில் ஆர்டர்களை எடுப்பதை நிறுத்தி விட்டு அவற்றைத் தயாரிக்கம் பணியில் தாம் தீவிரம் காட்டி வருவதாக காவடி தயாரிப்பாளரான கே.செல்வராஜா (வயது 53) கூறினார்.

இம்மாதம் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பயன்படுத்துவதற்காக 20 காவடிகளுக்கு தாம் ஆர்டரை பெற்றுள்ளதாக 26 வயது முதல் இந்த காவடித் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் செல்வராஜா தெரிவித்தார்.

தயாரிக்கப்பட்ட காவடிகளில் பெரும்பாலாவற்றை பத்துலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் கடந்த வாரமே பெற்றுச் சென்று விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காவடி தயாரிப்பதில் இவ்வாண்டு நாங்கள் எதிர்நோக்கும் தலையாயப் பிரச்னை என்னவென்றால் பொருள் விலையேற்றம்தான். நான் பெரும்பாலும் மயில் இறகுகளைக் கொண்டுதான் காவடி தயாரிக்கிறேன். மயில் இறகுகளின் விலை தற்போது சற்று உயர்வு கண்டுள்ளது. இதனால் முன்பைக் காட்டிலும் இம்முறை காவடியின் விலையை சற்று அதிகரிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

ஒரு காவடியின் குறைந்த பட்ச விலை 800 வெள்ளியாகும்.  அளவு மற்றும் வடிவமைப்பைப் பொறுத்து சில காவடிகள் 1,200 வெள்ளி வரை விலை போகும் என்றார் அவர்.

காவடிகளைத் தயாரிக்கும் கலையை மறைந்த தன் தந்தையிடமிருந்து தாம் கற்றுக் கொண்டதாக அண்மையில் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் செல்வராஜா குறிப்பிட்டார்.


Pengarang :