ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

சுபாங் ஜெயா வட்டாரத்தில் ஒரே வாரத்தில் 611 டிங்கி சம்பவங்கள் பதிவு

சுபாங் ஜெயா, பிப் 1- சுபாங் ஜெயா வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 611 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களில் இந்த எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் கூறியது.

கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 556 ஆக மட்டுமே இருந்ததாக சுபாங் ஜெயா துணை டத்தோ பண்டார் முகமது ஜூல்கர்னாய்ன் சே அலி கூறினார்.

இப்பகுதியில் டிங்கி பரவல் அதிகம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட பத்து பகுதிகளில் இந்த சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.

இங்குள்ள டேசா மினினும் ரிம்பா, லெஸ்தாரி பெர்டானாவில் கடந்த 66 நாட்களில் 30 டிங்கி சம்பவங்கள் பதிவான வேளையில் யுஎஸ்ஜே 9/5இல் கடந்த 49 நாட்களில் 20 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற தலைமையகத்தில் நடைபெற்ற மாநகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

பொது மக்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கும் அதேவேளையில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பதற்கு வாரத்தில் 10 நிமிடங்களையாவது செலவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 


Pengarang :