SELANGOR

எம்.பி.எஸ்.ஏ.வின் சமூக வாகனச் சேவையை 1,434 மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தினர்

ஷா ஆலம், பிப் 2- ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள இலவசச் சமூக வாகனச் சேவையைக் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,434 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த 2015இல் 91 பேரும், 2016இல் 127 பேரும், 2017இல் 202 பேரும், 2018இல் 190 பேரும், 2019இல் 205 பேரும் 2020இல் 126 பேரும் 2021இல் 13 பேரும் 2022இல் 483 பேரும் இந்த சேவையைப் பயன்படுத்தியதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

இந்த சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்தது. எனினும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலத்தில் இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.

மாநகர் மன்றம் பட்டியலிட்டுள்ள அரசாங்க மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காகச் செல்ல விரும்பும் மாற்றுத் திறனாளிகளும் மூத்தக் குடிமக்களும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக மாநகர் மன்றம் நிறுவனச் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சேவைக்காக மாநகர் மன்றம் இரு வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் பயணிப்பதற்குரிய வசதிகளைக் கொண்ட வேன் ஒன்று இச்சேவைக்குப் பயன்படுத்தப்படும் வேளையில் மூத்தக் குடிமக்களை ஏற்றுவதற்கு புரோட்டேன் எக்ஸோரா வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சேவையைப் பயன்படுத்த விரும்பும் பொது மக்கள் 03-55222732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த சேவை வழங்கப்படுகிறது.

இந்த இலவசப் பயணச் சேவை வழங்கப்படும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் பின்வருமாறு-
– செக்சன் 7 மற்றும் செக்சன் 19 சுகாதாரக் கிளினிக்
– கிள்ளான், புக்கிட் கூடா சுகாதாரக் கிளினிக்
– ஷா ஆலம் பெரிய மருத்துவமனை
– சுங்கை பூலோ மருத்துவமனை
– கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை
– பெ.ஜெயா. மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம்


Pengarang :