NATIONAL

ஈப்போ, கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூச விழாவில் 400,000 பக்தர்கள் திரள்வர்

ஈப்போ, பிப் 3- வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் குனோங் சீரோ, கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழாவில் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் உட்பட 400,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு தைப்பூச விழாவின் கோலாகல நிகழ்வுகளில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக ஆலயத் தலைவர் எம்.விவேகாந்தா கூறினார்.

முந்தைய ஆண்டுகள் போல் கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் இம்முறை விதிக்கப்படாதக் காரணத்தால் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் இம்முறை நடைபெறும்  தைப்பூச விழாவில் கலந்து தங்கள் நேர்த்திக கடனைச் செலுத்த அதிகமானோர் வருகை புரிவர் என அவர் சொன்னார்.

புந்தோங், சுங்கை பாரி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து கல்லுமலை ஆலயம் வரையிலான  ஊர்வலத்தில்  சுமார் 1,000 காவடிகள் பங்கேற்கும் என பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இந்த தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் போலீசார் உதவியுடன் சிறப்பான முறையில் செய்யப்பட்டு விட்டன. தைப்பூச விழாவின் போது சீரான போக்குவரத்தை காவல்துறையினர் உறுதி செய்யும் அதேவேளையில் காவடிகள் செல்லும் வழிகளையும் கண்காணிப்பர் என்றார் அவர்.

இவ்விழாவை முன்னிட்டு உணவு, பானங்கள், வழிபாட்டுப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு 200 கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ஆலய வளாகம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்கு ஈப்போ மாநகர் மன்றத்தின் உதவியுடன் ஆலய நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை ஆங்காங்கே வைத்துள்ளது. பொது மக்களும் ஆலயம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :