SELANGOR

ஷா ஆலம் அரங்கின் கட்டுமானச் செலவினம் அடுத்த மாதம் தொடக்கத்திற்குள் அறிவிக்கப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், பிப் 3- ஷா ஆலம் அரங்கின் கட்டுமானச் செலவினம் தொடர்பான துல்லியமான தகவல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வழங்கப்படும்.

தற்போது இங்கு நடைபெற்று வரும் அந்த அரங்கம் தொடர்பான கண்காட்சி மற்றும் பொது மக்களின் கருத்தறியும் நிகழ்வு வரும் பிப்ரவரி 10ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தவுடன் அந்த விபரங்கள் மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த அரங்கின் கட்டுமானச் செலவினத்தை மதிப்பிடும் நிபுணர்கள் நம்மிடம் உள்ளனர். அரங்கை மட்டும் நிர்மாணிப்பதாக இருந்தால் அதற்கு 70 கோடி முதல் 80 கோடி வெள்ளி வரை தேவைப்படும். ஆனால் நாம் ஒட்டுமொத்த விளையாட்டுத் தொகுதியையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பூங்கா, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளோடு ஹோட்டலையும் நிர்மாணிக்கவிருக்கிறோம். ஆகவே அதற்கான செலவு
சற்று அதிகமாகவே இருக்கும் என்றார் அவர்.

அரங்குடன் மற்றொரு அரங்கை ஒப்பிட்டு பார்த்தால் இதன் நிர்மாணிப்புச் செலவினம் 70 கோடி வெள்ளிக்கும் அதிகமாகவும் 100 கோடி வெள்ளிக்கும் குறைவாகவும் இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

ஷா ஆலம் அரங்கின் மறுநிர்மாணிப்புக்கு 70 கோடி வெள்ளி செலவு ஆகும் என்ற கூற்று சற்றும் பொருத்தமற்றதாக உள்ளது என்று ஜொகூர் டாருள் தாக்ஸிம் கால்பந்து குழுவின் உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் கூறியிருந்தது தொடர்பில் அமிருடின் இவ்வாறு கருத்துரைத்தார்.

இந்த திட்ட மேம்பாட்டாளரான மலேசியான் ரிசோர்சஸ் கார்ப்ரேஷன் பெர்ஹாட் (எம்.ஆர்.சி.பி.) நிறுவனத்துடன் மாநில அரசு மாற்றிக் கொள்ளவிருக்கும் நிலம் தொடர்பான விபரங்களையும் தாம் அப்போது அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டரங்கின் அருகிலுள்ள பயன்படுத்தப்படாத நிலத்தை அந்நிறுவனத்துடன் மாற்றிக் கொள்வது தொடக்கக் கட்டத் திட்டமாக இருந்தது. எனினும், தற்போது அந்த திட்டத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளோம். எம்.ஆர்.சி.பி. நிறுவனம் தனது சொந்த செலவில் முழு திட்டத்தையும் மேற்கொள்ளும். அதன் பின்னர் அந்த செலவுத் தொகையை
நாங்கள் ஈடுசெய்வோம் என்றார் அவர்.


Pengarang :