SELANGOR

#dunsentosabebasdenggi TikTok“ வீடியோ போட்டியின் வெற்றியாளருக்கு RM500 ரொக்கப் பரிசு – செந்தோசா மாநிலச் சட்டமன்றம்

ஷா ஆலம், பிப் 3: செந்தோசா மாநிலச் சட்டமன்றம் (DUN) RM500 வரை ரொக்கப் பரிசுகளை வழங்கும் #dunsentosabebasdenggi TikTok வீடியோ போட்டியை ஏற்பாடு செய்கிறது.

அதன் பிரதிநிதி டாக்டர் ஜி குணராஜ், பிப்ரவரி 8 ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறும் என்றும், செந்தோசா மாநிலச் சட்டமன்றத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் ‘ஏடிஸை ஒழித்தல்’ என்ற கருப்பொருளில் ஒரு நிமிட ஆக்கப்பூர்வமான வீடியோவைப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

முதல் இடத்தை வெல்பவருக்கு RM500, இரண்டாவது (RM300) மற்றும் மூன்றாவது (RM200) மற்றும் சிறப்பு பரிசுகள் முதலில் பதிவு செய்த 50 பங்கேற்பாளர்களுக்கு காத்திருக்கின்றன.

“டிங்கியைத் தடுப்பதில் சமூகத்தை ஈடுபடுத்துவதற்காகச் செந்தோசா சிலாங்கூர் சமூகச் சுகாதார தன்னார்வலர்கள் (சுகா) முன்முயற்சியே இந்தப் போட்டி” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறக்கூடிய இடங்களின் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றார்.

“மலாய், தமிழ், சீனம் அல்லது ஆங்கிலம் உட்பட அனைத்து மொழிகளில் இருந்தும் வீடியோக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் பதிவை இங்கே சமர்ப்பிக்கவும்: https://wa.me/qr/JAHB73OPTNL7I1,” என்று அவர் தெரிவித்தார்

ஜனவரி 1 முதல் நேற்று வரை 5,473 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அதிகமாகும்.


Pengarang :