NATIONAL

11,000 லிட்டர் மானிய விலை டீசல் பறிமுதல்- ஆடவர் கைது

ஈப்போ, பிப் 3– உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின்  பேராக் மாநிலக் கிளை நேற்று மேற்கொண்ட  சோதனை நடவடிக்கையில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு 11,000 லிட்டர் மானிய விலை டீசலும் பறிமுதல் செய்யப்பட்டது.

உளவுத் துறையின் தகவலின் அடிப்படையில் அமலாக்கக் பிரிவினர்  நேற்று காலை 9.00 மணியளவில் தெலுக் இந்தானில் உள்ள ஆன்சன் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் சோதனை நடத்தியதாக  மாநிலத் தலைமை அமலாக்க அதிகாரி முகமது அஸ்னான் ஷா காலிட் கூறினார்.

தலா 1,000 லிட்டர்  டீசல் கொள்ளளவு கொண்ட 11 ஃபைபர் கொள்கலன்களும்  ஸ்கிட்  கொள்கலன்களுடன் கூடிய இரண்டு லாரிகளும் அந்த வளாகத்தில் இருந்தது கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்.

இந்த வளாகத்தில் டீசலை சேமித்து வைப்பதற்கான முறையான உரிமம் அல்லது அனுமதி இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார். கைப்பற்றப்பட்ட டீசல் உள்ளிட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 201,000  வெள்ளியாகும் என மதிப்பிடப்பட்டதாகவும் 1961ஆம் ஆணடு விநியோக கட்டுப்பாடு சட்டத்தின்  21வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக 40 வயதான உள்ளூர் நபர்  கைது செய்யப்பட்டதாகவும் முகமது அஸ்னான்ஷா கூறினார்.

இத்தகையச்  சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினருடனும் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்.  கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானியம் வழங்கப்படும் பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :