சிலாங்கூர்  அரசின் இரண்டு அடுக்கு சுற்றுலா பஸ் சேவை ஏப்ரல் மாதம் தொடங்கும்

ஷா ஆலம், பிப் 3- சிலாங்கூர் அரசின் இரண்டு அடுக்கு சுற்றுலா பஸ் சேவை (ஹோஹோ) வரும் ஏப்ரல் மாத மத்தியில் தொடங்கப்படும்.

 இத்திட்டத்தின் முதல் கட்ட சேவையை பெறும் முதலாவது மாவட்டமாக சிப்பாங் விளங்குவதாக சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

சுங்கை பீலேக் பகுதியில் சனிக்கிழமையும் சைபர் ஜெயாவில் ஞாயிற்றுக்கிழமையும் இந்த சேவை வழங்கப்படும். தொடக்கத்தில் ஒரு பஸ் மட்டும் இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். இந்த முதல் கட்டத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து இந்த சேவையை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

அடுத்த கட்டமாக இந்த சேவை இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தேவையைப் பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

சிப்பாங்கில் சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் முதன் முறையாக இந்த சுற்றுலா பஸ் சேவை அறிமுகப்படுத்தப் படுவதாக அவர் முன்னதாக கூறியிருந்தார்.

இந்த சேவையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) வழி மாற்றுப் பயணத்திற்காக (டிரான்சிட்) நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்வதற்கு முன்னர் சிப்பாங் நகரை வலம் வரலாம் என்றார் அவர்.

இந்த சேவைக்கு உள் நாட்டைச் சேர்ந்த பெரியவர்களுக்கு 50.000 வெள்ளியும் சிறார்களுக்கு 40.00 வெள்ளியும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரியவர்களுக்கு 80 வெள்ளியும் சிறார்களுக்கு 70 வெள்ளியும் கட்டணமாக விதிக்கப்படும்.


Pengarang :