SELANGOR

கட்டாய முகக்கவரி அமலாக்கத்தை எம்.பி.ஏ.ஜே. ஆறு மாதங்களுக்குக் கண்காணிக்கும்

ஷா ஆலம், பிப் 7– உணவகத் துறை சார்ந்த பணியாளர்கள் முகக்கவரி அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறை முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஆறு மாதங்களுக்குக் கண்காணிப்பை மேற்கொள்ளும்.

இந்த கட்டாய முகக்கவரி உத்தரவு அமலுக்கு வந்த ஜனவரி முதலாம் தேதி தொடங்கி இந்த கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் முகமது பவுசி முகமது யாத்திம் கூறினார்.

தற்போது உணவகங்களில் பரவலாக முகக்கவரி அணியப்படுவதை நாம் காண்கிறோம். இந்த உத்தரவு முழுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நாம் தொடர்ந்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்வோம் என அவர் சொன்னார்.

இந்த கண்காணிப்பு காலம் முடிவுக்கு வந்தவுடன் உத்தரவைப் பின்பற்றாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் நாம் வழங்கிய இந்த கால அவகாசம் எத்தகைய பலனைத் தந்துள்ளது எனக் கண்டறிய விரும்புகிறோம் என அவர் சொன்னார்.

சிலாங்கூரிலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முகக்கவரி அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறை ஜனவரி முதலாம் தேதி தொடங்கி அமலுக்கு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு இறுதியில் கூறியிருந்தார்.


Pengarang :