SELANGOR

பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க ரவாங் கே.டி.எம். நிலையத்தில் 400 வாகன நிறுத்துமிடங்கள்

ஷா ஆலம், ஜன 7- ரவாங் நகரில் நிலவி வரும் வாகன நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் ரவாங் கே.டி.எம். இரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்படும் அடுக்குமாடி வாகன கார் நிறுத்துமிட கட்டுமானப் பணிகள் வரும் 2026ஆம் ஆண்டு முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் நிறுத்துமிடத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்த நகரில் கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வரும் வாகன நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

சுமார் 54 லட்சம் வெள்ளி செலவிலான இந்த ஐந்து மாடி கார் நிறுத்துமிடக் கட்டிடப் பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டதாக அவர் சொன்னார். ரவாங் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டு விட்டது.

ரவாங் கே.டி.எம். நிலையத்தில் போதுமான கார் நிறுத்துமிடங்கள் இல்லாதக் காரணத்தால்
பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்படும் இந்த அடுக்குமாடி கார் நிறுத்துமிடக் கட்டிடம் இந்த பிரச்சனைக்குத் தீர்வினை ஏற்படுத்தும் என்பதோடு கே.டி.எம்.சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும் என்று சுவா சொன்னார்.

இந்த புதிய கார் நிறுத்துமிடக் கட்டிடத்தில் 437 கார் நிறுத்துமிடங்களும் 128 மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்களும் உள்ளதாக அவர் தனது டிக்டாக் செயலி வழி வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டார்.

இந்த கட்டிடத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்கள் தவிர்த்து பஸ்களும் டாக்சிகளும் பயணிகளை இறக்குவதற்கும் ஏற்றுவதற்கும் வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, இந்த கட்டிடம் கழிப்பறை, லிஃப்ட், நடைபாதை, கண்காணிப்பு
கேமரா உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.


Pengarang :