NATIONAL

போதைப் பொருள் குற்றத்திற்காகப் பொழுதுபோக்கு மையத்தின் 18 வாடிக்கையாளர்கள் கைது

கோலாலம்பூர், பிப் 7- ஜாலான் கூச்சாய் லாமாவிலுள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் அதிரடிச் சோதனை நடத்திய போலீசார் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 18 வாடிக்கையாளர்களைக் கைது செய்தனர்.

பிரீக்பீல்ட்ஸ் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த குழுவினர் நேற்று விடியற்காலை 1.15 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஷாம் அப்துல் சுக்கோர் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது 20 முதல் 40 வயது வரையிலான மூன்று உள்நாட்டினர் மற்றும் 12 பெண்கள் உள்ளிட்ட 15 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையின் போது 16 பேர் மெத்தம்பெத்தமின் மற்றும் கெத்தாமின் போதைப் பொருளை உட்கொண்டிருப்பது தெரியவந்தது என்று அவர் சொன்னார்.

பிடிபட்டவர்களில் இருவர் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் வரும் 12ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் இதர 16 பேர் அதே சட்டத்தின் 12(2) மற்றும் 15(1)(ஏ) பிரிவுகளின் கீழ் வரும் 9ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது 13,810 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப் பொருளை 150 போதைப் பித்தர்கள் பயன்படுத்தலாம். இப்போதைப் பொருள் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.


Pengarang :